Jan 26, 2011

அம்மா கவிதை - ஒன்று

நானும் அப்படியே


கருவறையின் காரிருளின் பயம் போக்க தன் வயிற்றினருகே கையை
வைத்திருந்து தைரியம் தந்தவளின் கைதான் முதலில் தொடவேண்டும்

உறுப்புகளெல்லாம் ஒட்டிய பின்பு உதைக்க ஆரம்பித்தவுடன் ஆனந்தக்
கண்ணீர் சிந்தியவளின் கண்களின் பார்வையில் முதலில் படவேண்டும்

புவியீர்ப்பு விசை மீறி தன் பேரன்பின்யீர்ப்பால் உந்தி நின்று என்
நிலைகாத்தவளின் வாய்மொழி தான் முதலில் என் செவியில் விழவேண்டும்

இப்படியெல்லாம் எண்ணித்தான் எல்லாக்குழந்தைகளும் பிறக்கின்றது
அப்படி எதுவும் நடக்கவில்லை என்று கூட அழவில்லை ஆனால்

பெற்ற வலி தந்த மயக்கத்திலுறங்கும் தாய் தன்னைப் பெற்றதனால்
மரித்துவிட்டலோ என்றேண்ணித்தான் அழ ஆரம்பிக்கிறது...

நானும் அப்படியே!!

காதல் பருவம் - இரண்டு

காதல் பிரபஞ்சம்

காதலெனும் பால்வெளியில்
காமமெனும் சூரியகுடும்பத்தில்
நம் மெத்தையெனும் பூமியில்
நீ கிடந்திருப்பாய் நிலப்பரப்பைப் போல
நான் உன் மேல் மிதந்தேன் மேகத்தைப் போல
உன் கூந்தலெனும் காட்டுபகுதியாக
அதை வளைக்கும் என் கைகள் காற்றாக
என் உயிர் பொழியக்காத்திருக்கும் மழையாக
உன் அங்கமெல்லாம் அசைந்து கொடுக்கும் மரமாக
நம் உள்ளமெல்லாம் துள்ளும் மழைக்காக ஆடும் மயிலென
சிந்திய முத்தங்கள் மின்னலாக
அது எழுப்பிய சத்தம் இடியாக
நம் இருவரின் வியர்வை சாரலாக
என் உயிர் பாயிந்து உன்னில் மலரும் சிறு புல்லென
இவையனைத்தும் பார்த்த என் அறைவிளக்கு நிலவென
நானும் மெத்தையில் விழுந்துவிட்டேன் கடலோடு கலந்துவிட்டேன்

****************************************************************
அமாவாசை

கதிரொளியை பரதிபலிக்க முடியாத நிலவின் ஒளியின்றி நிர்மூலமாய் நிற்கும் வானம் அது போல நீ வராத நாளன்று தன் களையை இழந்திருக்கும் நம் அலுவலகமும்

நிலவைப் பார்த்துப் பார்த்து சோறுண்ணப்பழகிய குழந்தையோ அன்று அது வராதேனத் தெரியாமல்

நிமிடத்திற்கொருமுறை வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் நானோ

நீ விடுப்பெனத் தெரிந்தும் உன் இருப்பிடத்தை நிமிடத்திற்கொருமுறை பார்த்துக்கொண்டிருப்பேன்

நிலவைப் பார்க்காமல் உண்ணாமல் கண்ணீருடன் அப்பிள்ளை உறங்கிய பின்

நிலவைக் காட்ட முடியாத சோகத்தில் அப்பிள்ளையின் தாய் கண்ணீர் சிந்துவாள்

உன்னைக் காணமல் கண்ணீர் சிந்திய என் கண்களுக்கு தைரியம் சொன்ன என் இதயம் அழத்தொடங்கியது அப்பிள்ளையின் தாய் போல


விழித்ததும் இதயம் சொன்னது இன்று நீ வருவாயென!!